Wednesday, February 19, 2014

நளினியின் காதல் நினைவுகள் மட்டுமே எஞ்சியுள்ளன: முருகன் உருக்கமான பேட்டி Her love and memories are the only ones poignant interview Murugan

நளினியின் காதல் நினைவுகள் மட்டுமே எஞ்சியுள்ளன: முருகன் உருக்கமான பேட்டி Her love and memories are the only ones poignant interview Murugan 

சென்னை, பிப். 19–ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கிட்டத்தட்ட 23 ஆண்டுகளாக சிறையில் வாடிய முருகன்-நளினியின் காதல் கதை மிகவும் சோகமயமானது.1991–ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதன் முதலாக சந்தித்த இருவரும் 4 மாதத்துக்குள்ளாகவே ஜுன் மாதத்தில் ராஜீவ் கொலை வழக்கில் கைதாகி சிறை சென்று விட்டனர்.இவர்களின் இல்லற வாழ்வின் சாட்சியாக பிறந்த அரித்ராவுக்கு 22 வயதாகிறது. அவர் லண்டனில் வாழ்ந்து வருகிறார்.இந்நிலையில், வேலூர் சிறையில் இருக்கும் முருகன் தனது காதல் வாழ்க்கை பற்றி மனம் திறந்துள்ளார். அதன் விவரம் வருமாறு:–9 சகோதர-சகோதரிகளுடன் யாழ்ப்பாணம் இத்தாவில் பிறந்த நான், 1987–ம் ஆண்டு மூத்த அண்ணனைத் தொடர்ந்து புலிகள் அமைப்பில் சேர்ந்தேன். வீட்டில் எனக்கு வைக்கப்பட்ட பெயர் ஸ்ரீகரன். புலிகள் அமைப்பில் வைக்கப் பட்ட பெயர் இந்து.எனது 19–ம் வயதில் 1991–ம் ஆண்டு ஜனவரியில் சென்னை வந்தேன். சென்னையில் எனக்கு நானே சூட்டிக் கொண்ட பெயர் தாஸ்.இங்கு பாக்கியநாதன் என்ற தமிழ் ஆர்வலர் வீட்டில் தங்க வைக்கப் பட்டேன். பாக்கியநாதனின் அக்கா தான் நளினி. ஆனால், நான் அவர்களது வீட்டில் தங்கி இருந்த போது அவர், தனது தாயாருடன் கோபித்துக் கொண்டு தனது பெரியம்மா வீட்டில் இருந்தார்.எனது பிறந்ததினமான பிப்ரவரி 8–ந்தேதி முதன்முதலாக நளினியை நான் சந்தித்தேன். அவரைப் பார்த்தவுடன் இனம் புரியாத ஈர்ப்பு வந்தது. ஆனால், அதனைக் காதல் எனச் சொல்ல முடியாது.எனது பிறந்தநாளில் என்னுடன் வந்தவர்களுக்கு எளிமையான விருந்தளித்தார் நளினி. எப்போதுமே பிறந்தநாளைக் கொண்டாடியிராத எனக்கு அது புதிய அனுபவமாக இருந்தது.நளினியை தாயுடன் சேர்த்து வைப்பதற்காக அடிக்கடி சந்தித்தேன் . மார்ச் மாதம் பொதுக்கூட்டம் ஒன்றிற்காக மெரினா பீச் சென்றிருந்த போது, கூட்டமாக இருந்த சாலையைக் கடப்பதற்கு உதவினார் நளினி. அந்தப் பிடிப்பிலும், வார்த்தையிலும் அவ்வளவு பிரியம். அன்று வீடு வரை சேர்ந்தே நடந்து வந்தோம். எங்கள் காதலுக்கு இரு தரப்பிலும் அச்சாணி விழுந்த நாள் அது.காதல் உணர்வு எங்களை ஈர்த்து இருந்தாலும், நளினியின் எதிர்கால வாழ்வு குறித்து நான் கவலைப்பட்டேன். அந்தக் கவலைகளை ஏற்றுக் கொண்ட நளினி, அதற்கான காரணங்களை நிராகரித்தார். காதலில் உறுதியாக இருந்தார். 'உன்னோடு ஒருநாள் வாழ்ந்தாலும் போதும்' என்றார்.பெரிய கனவுகள், ஆசைகள் எதுவும் இல்லாவிட்டாலும், வாழ்வின் மீது பெரும் தாகம் இருந்தது. அதை எப்படி அமைப்புக்குச் சொல்வது, நளினி குடும்பம் இதை எப்படி ஏற்றுக் கொள்வார்கள் என்ற எண்ணங்களுக்கு இடையே நாட்கள் ஓடியது.ஒரு பெண்ணாக பிற உயிர்கள் மீது கரிசனத்தோடு இருந்தாரேத் தவிர ஈழப் போராட்டத்துக்கும் நளினிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஒரு போராளியைக் காதலித்ததைத் தவிர வேறு எந்தத் தவறையும் நளினி செய்யவில்லை.இந்நிலையில், எனக்காக, என் மீதான காதலுக்காக எந்தப் பிரதிபலனும் எதிர்பார்க்காமல் தணு, சுபா இருவரையும் சில இடங்களுக்கு அழைத்துச் சென்றார் நளினி.ஏப்ரல் 22–ந்தேதி திருப்பதியில் வைத்து நளினியைத் திருமணம் செய்து கொண்டேன். பல்வேறு நெருக்கடிகள் காரணமாக எங்கள் திருமணத்தை ரகசியமாக வைக்க வேண்டியிருந்தது.இந்நிலையில், மே21–ந் தேதி ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார் என்ற செய்தியைக் கேள்விப்பட்டதும், அதிர்ச்சியும் குழப்பமும் சரிவிகிதத்தில் என்னைத் தாக்கின.ஆனால், ராஜீவ் கொலை வழக்கில் தாணு படம் பத்திரிக்கைகளில் வெளியானபோது பீதியில் நானும், நளினியும் உறைந்து விட்டோம்.நளினி தம்பி பாக்கியநாதனை சி.பி.ஐ கைது செய்தது. நானும் நளினியும் மீண்டும் திருப்பதி சென்றோம். தற்கொலை செய்து கொள்ள நானும் நளினியும் முடிவு செய்திருந்தோம்.என்னிடம் இருந்த சயனைடு குப்பி தண்ணீரில் நனைந்து பாழாகி விட்டதால், புதிய சயனைடு குப்பி கேட்டிருந்தேன்.ஆனால், திருப்பதியில் நளினி கர்ப்பமாக இருந்தது தெரிய வந்தது. அதனால் மீண்டும் விழுப்புரம் திரும்பினோம். சைதாப் பேட்டை பேருந்து நிலையத்தில் இறங்கிய எங்களை கைது செய்தனர். சில நாட்களில் எனக்கு, 'மொட்டைத் தலை' முருகன் என பெயர் வைத்தார்கள். ரொம்ப வேடிக்கையான பெயர் தான்.விசாரணை கைதியாக செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட போது நளினி ஐந்து மாதக் கர்ப்பிணி. நீண்ட போராட்டத்திற்குப் பிறகு நளினியை நான் பார்த்த போது, நடக்க முடியாமல் தரையில் தவழ்ந்து வந்தார். 'எனக்கு சாப்பாடு பத்தலை. ரொம்ப பசிக்குது. இப்படியே விட்டா என் பிள்ளை செத்துப் போகும்' எனக் கதறினார்.சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து நளினிக்கு போதிய உணவு கிடைக்கச் செய்தேன். குறித்த தேதிக்கு முன்னதாகவே நளினிக்கு பெண் குழந்தை பிறந்தது. தாயும், சேயும் பலவீனமாக இருந்தார்கள். மாற்றுத் துணியோ, உணவோ எதுவுமே எங்களுக்கு இல்லை.ஒவ்வோரு இரவிலும் நளினி அனுபவித்த அந்தத் துன்பம் என்னால் வந்தது என்று இப்போதும் நினைத்து நினைத்து அழுகிறேன்.சிறை அதிகாரி ஒருவர் நளினியின் நிலையைப் பார்த்து குழந்தைக்கு பால் பவுடர் வாங்கிக் கொடுத்தார். சிறைக்கு வந்த பேரறிவாளனின் அப்பா குயில்தாசன் குழந்தை அரித்ராவுக்கு கொசுவலை வாங்கிக் கொடுத்தார். கேட்க அது சாதாரணமாக இருக்கும். ஆனால், அது அப்போது மிகப் பெரிய உதவி.அரித்ராவுக்கு இரண்டரை வயதான போது நளினியை சேலம் சிறைக்கு மாற்றினார்கள். அங்கே, பசு மாட்டை ஆச்சரியமாகப் பார்த்த அரித்ராவின் எதிர்காலம் குறித்து நளினிக்கு அச்சம் ஏற்பட்டது.எங்கள் வழக்கிலேயே சக சிறைவாசியாக இருந்த சுசீந்திரனின் தாயார் அரித்ராவை கோவையில் வைத்து வளர்த்தார். சில ஆண்டுகள் கழித்து ஈழம் சென்ற அரித்ரா, பிறகு லண்டன் சென்றாள். தற்போது அவளுக்கு வயது 22.இன்றும் பாதுகாப்பு என்ற பெயரில் தனிமைச் சிறையில் தான் நானும், நளினியும் வாழ்ந்து வருகிறோம். ஆறு அடி தூர இடைவெளியில் 10 பேர் சூழ்ந்து நிற்க தான் நானும், நளினியும் பேசிக் கொள்வோம்.நீண்ட கால சிறைவாசிகளுக்கு செவித்திறன் பாதிக்கப்படும். ஆம், எனக்கும், நளினிக்கும் செவித்திறன் பாதிப்பு உள்ளது. செவித்திறன் பாதிக்கப்பட்ட இருவர் ஆறு அடி இடைவெளியில் என்னப் பேசிக் கொள்ள முடியும் என்று நீங்கள் கற்பனை செய்து பார்த்துக் கொள்ளுங்கள்.வாழ்வின் எந்தச் சந்தோஷங்களையும் காணாத எனது வாழ்வில், ஒரு வானவில்லைப் போல மின்னி மறைந்த நளினியுடனான காதல் நினைவுகள் மட்டுமே என்னிடம் எஞ்சியிருக்கின்றன.இவ்வாறு முருகன் கூறியுள்ளார்.... 

No comments:

Post a Comment

Popular Posts