Thursday, December 19, 2013

இந்திய பெண் தூதர் கைது விவகாரத்தில் நடந்தது என்ன? US explained what happened in the case of an Indian woman diplomat arrested

இந்திய பெண் தூதர் கைது விவகாரத்தில் நடந்தது என்ன?: அமெரிக்கா விளக்கம் US explained what happened in the case of an Indian woman diplomat arrested

நியூயார்க், டிச.20-

நியூயார்க் நகரில் இந்திய தூதரகத்தில் துணைத்தூதராக பணியாற்றிவந்த டாக்டர் தேவயானி கோப்ரகடே, கடந்த 12-ந்தேதி விசா மோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின்பேரில் கைது செய்யப்பட்டு, நடத்தப்பட்டவிதம் இந்தியாவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் நான்சி பவலை மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் சுஜாதாசிங் நேரில் அழைத்து கடும் கண்டனம் தெரிவித்தார்.

இந்த விவகாரம் இந்திய பாராளுமன்றத்திலும் எதிரொலித்தது. இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகளின் சலுகைகளை பறிக்க அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேவயானிக்கு முழுமையான பாதுகாப்பு அளிக்கிறவகையில் அவரை ஐ.நா. சபைக்கான நிரந்தர இந்தியத்தூதராக நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

தேவயானி, இந்தியாவில் இருந்து வீட்டு வேலை செய்வதற்காக அழைத்துச்சென்ற பணிப்பெண் சங்கீதா ரிச்சர்டுக்கு அமெரிக்க சட்ட விதிகள்படி மணிக்கு 9.75 டாலர் (சுமார் ரூ.620) தருவதாக அழைத்துச்சென்றதாகவும், ஆனால் மணிக்கு 3.11 டாலர் மட்டுமே (சுமார் ரூ.186) சம்பளம் தந்ததாகவும், தினமும் 19 மணி நேரம் வலுக்கட்டாயமாக வேலை வாங்கி கொடுமைப்படுத்தியதாகவும், இதற்கு உடன்படாத நிலையில் அந்தப்பெண், தேவயானியின் வீட்டில் இருந்து சென்று விட்டதாகவும் தெரியவந்தது. அவர் என்ன ஆனார் என்பதில் சஸ்பென்ஸ் நீடித்து வந்தது.

ஆனால் தேவயானியின் குடும்பத்தினர் இந்தியாவில் இருந்து வெளியேற்றப்பட்டு, அமெரிக்காவில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக இப்போது தெரிய வந்துள்ளது. தேவயானி மீது அமெரிக்க அரசு சட்ட நடவடிக்கைகள் எடுக்கத்தொடங்கிய நிலையில் சங்கீதா ரிச்சர்டு குடும்பத்தினரை அமைதிப்படுத்த இந்தியத்தரப்பில் முயற்சிகள் நடந்ததாகவும், அவரை அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு அழைத்துவர வலுக்கட்டாயமாக முயற்சி நடந்ததாகவும் அமெரிக்க அரசு வக்கீல் பிரித் பராரா தெரிவித்துள்ளார். (இவரும் இந்தியர்தான்).

அவர், தேவயானி நடத்தப்பட்டவிதம் குறித்து எழுந்துள்ள சர்ச்சைகள் பற்றி, விரிவான விளக்கம் அளித்து 3 பக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

தேவயானி கைது செய்யப்பட்டது தொடர்பான விவகாரத்தில் வெளியான தவறான தகவல்கள் குறித்து, நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். தூதர்கள், தூதரக அதிகாரிகளின் வேலைக்காரர்களை பாதுகாக்க உருவாக்கப்பட்டுள்ள அமெரிக்க சட்டங்களை தேவயானி பின்பற்ற தவறி உள்ளார்.

தேவயானி அவரது குழந்தைகள் முன்னிலையில் கைது செய்யப்பட்டதாக தவறாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவரை மற்றவர்களைப்போல அல்லாமல், முடிந்த அளவு மிகுந்த முன் எச்சரிக்கை உணர்வுடன் கைது செய்துள்ளனர். அவருக்கு அப்போது கை விலங்கிடப்படவில்லை. கட்டுக்குள் வைக்கப்பட்டு விடவும் இல்லை.

உண்மையைச் சொல்வதானால், கைது செய்த அதிகாரிகள் வழக்கமாக மற்றவர்களிடம் இருந்து செல்போனை பறித்து விடுவதைக்கூட செய்யவில்லை. தனிப்பட்ட முறையில் அவர் எண்ணற்ற தொலைபேசி அழைப்புகளை செய்யவும் அனுமதி வழங்கப்பட்டது. குழந்தைகளை கவனித்துக்கொள்ள அவர் யாரையெல்லாம் தொடர்பு கொள்ள விரும்பினாரோ அதற்கெல்லாம் வாய்ப்பு அளிக்கப்பட்டது.

தேவயானி கைது தொடர்பான நடவடிக்கைகள் அனைத்தும் ஏறத்தாழ 2 மணி நேரத்தில் முடிந்து விட்டது.

கடும் குளிர் காரணமாக அவரை தங்களது காரில் வைத்து போன் செய்யவும் அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளனர். அவருக்கு காபி கூட வரவழைத்து கொடுக்கப்பட்டது. அவருக்கு உணவு தரவும் முன்வந்தனர்.

அவர் போலீசாரின் காவலுக்கு ஒப்படைக்கப்பட்டபோது, ஒரு பெண் போலீஸ் அதிகாரியை கொண்டு அந்தரங்கமாக முழுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டார். இது ஒவ்வொரு வழக்கிலும் குற்றம் சாட்டப்படுகிறவர்களுக்கு வழக்கமாக மேற்கொள்கிற சோதனைதான். அவர் பணக்காரராக இருந்தாலும், ஏழையாக இருந்தாலும், அமெரிக்கராக இருந்தாலும், இல்லாவிட்டாலும் தனிப்பட்ட முறையில் அவர்கள் யாரையும் பாதிப்புக்குள்ளாகிவிடும் விதத்தில் அல்லது தன்னைத்தானே எதுவும் செய்துவிடக்கூடாது என்பதற்காக அவர்கள் எதையும் வைத்துக்கொண்டிருக்கவில்லை என்பதை உறுதி செய்வதற்கு இந்த சோதனை செய்யப்படுகிறது.

கொழுந்து விட்டு எரியச்செய்கிற சூழலை உருவாக்கும் அளவுக்கு தேவயானி விவகாரத்தில் தவறான தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இதை சரிசெய்ய வேண்டியது முக்கியமாகி உள்ளது. ஏனெனில் அவை மக்களை தவறாக வழி நடத்திவிடும்.

தேவயானி, சட்டத்திலிருந்து தப்பிக்க முயற்சித்ததோடு மட்டுமல்லாமல், அவர் பொய்யான ஆவணங்களை அளித்துள்ளார். அவர் பொய்யான தகவல்களையும் அமெரிக்க அரசிடம் அளித்துள்ளார்.

எந்த அரசாங்கமாவது, தனது நாட்டுக்குள் ஒருவரை அழைத்துக்கொண்டு வருவதற்கு ஒருவர் பொய்யான தகவல்களை அளித்தால் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் விட்டு விடுமா?

சட்டத்தை மீறுகிற வகையில், பணிப்பெண்ணை சரிவர நடத்தாமல் இருந்தால் எந்த அரசாங்கமாவது நடவடிக்கை எடுக்காமல் விட்டு விடுமா?

இத்தகைய குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள இந்திய பிரஜை நடத்தப்பட்டவிதம் குறித்து வரம்பு கடந்து நடந்துகொள்கிறார்களே, ஆனால் இந்திய பணிப்பெண்ணோ, அவரது கணவரோ மோசமாக நடத்தப்பட்டது குறித்து கொஞ்சமாவது கொந்தளித்தார்களா?

எங்கள் அலுவலகத்தை பொறுத்தமட்டில் அது, வழக்கினை நடத்துகிற அலுவலகத்தின் பொறுப்பை கொண்டுள்ளது. கைது செய்தல், காவலில் வைத்தல் தொடர்பானது அல்ல. எனவே அவர் கைது செய்யப்பட்ட விவகாரம் குறித்த தகவல்களை தொடர்புடைய அமைப்புகளிடம்தான் கேட்க வேண்டும்.

இந்த விவகாரத்தில் தேவயானி நடந்துகொண்ட விதம், நியாயம் என கூறுகிற வகையில் இல்லை என்பது தெளிவு.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், பணிப்பெண் சங்கீதா ரிச்சர்டு தனது பாஸ்போர்ட்டு, விசாவை எங்கும் பணி செய்கிற வகையில் மாற்றிக்கொள்ள மிரட்டல் விடுத்ததாக கூறப்பட்டுள்ளது. மேலும், தேவயானியிடமிருந்து ரொக்கப்பணம், செல்போன், ஆவணங்கள் திருடிய குற்றச்சாட்டுக்களுக்காக ரிச்சர்டை கைது செய்ய அமெரிக்க அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே ஐ.நா.வுக்கான நிரந்தர இந்திய தூதராக நியமிக்கப்பட்டுள்ள தேவயானியை, நியூயார்க் துணை தூதரகத்தில் இருந்து விடுவிக்க எந்த ஒரு வேண்டுகோளும் வரவில்லை என்று வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஹார்ப் கூறினார்.
...
 

No comments:

Post a Comment

Popular Posts