இந்திய வீரர்களின் துணிச்சலால் அதிக உயிர் இழப்பு தவிர்ப்பு: ஐ.நா. பாராட்டு Indian soldiers life bravery loss avoidance UN Congratulation
நியூயார்க், டிச.23-
தெற்கு சூடானில் அமைதிப்படை முகாம் மீது நடைபெற்ற தாக்குதலின் போது இந்திய வீரர்களின் துணிச்சல்மிக்க செயல்களால் பெரிய உயிர் இழப்பு தவிர்க்கப்பட்டது என ஐ.நா.சபை அதிகாரி பாராட்டினார்.
ஆப்பிரிக்காவில் உள்ள தெற்கு சூடானின் அதிபரின் ராணுவத்துக்கும், துணை அதிபரின் புரட்சிப்படைக்கும் இடையே கடும் உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. அதில் 500-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதனால் அப்பாவி பொதுமக்கள் தஞ்சம் தேடி ஓடுகிறார்கள். இவர்களுக்கு அடைக்கலம் அளிக்க ஐ.நா.சபையின் கீழ் செயல்படும் அமைதிப்படையினர் 6 இடங்களில் முகாம் அமைத்து பாதுகாப்பு அளித்து வருகிறார்கள். இந்த அமைதிப்படையில் இந்திய ராணுவ வீரர்கள் கணிசமான அளவில் இடம் பெற்று இருக்கிறார்கள்.
இதுபோன்று அகோபோ நகரில் அமைக்கப்பட்ட முகாமில் 43 இந்திய வீரர்கள் உள்ளனர். இந்த முகாம் மீது கடந்த 19-ந்தேதி புரட்சிப்படையை சேர்ந்த சுமார் 2 ஆயிரம் பேர் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். அதில் 2 இந்திய வீரர்கள் உள்பட 22 பேர் உயிர் இழந்தனர். மேலும் ஒரு இந்திய வீரர் படுகாயம் அடைந்தார்.
உயிர் தியாகம் செய்த 2 இந்தியர்கள் வாரண்டு அதிகாரிகள் தர்மேஷ் சங்வான், குமார் பால் சிங் ஆவார்கள். காயம் அடைந்தவரின் பெயர் மோன்தால் ஷாபுல். இவரது மார்பில் குண்டு பாய்ந்துள்ளது. தற்போது அவர் மலாகால் என்ற இடத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். அவருடைய உடல்நிலை சீராக இருக்கிறது.
உயிர் இழந்த 2 பேரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் இரங்கல் கூட்டம் தலைநகர் ஜூபாவில் உள்ள ஐ.நா.சபை அலுவலக வளாகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் ஐ.நா. பொதுச்செயலாளரின் சிறப்பு பிரதிநிதி (தெற்கு சூடான்) ல்டே ஜான்சன் கலந்து கொண்டு 2 பேரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
பிறகு இவர்களின் உயிர் தியாகத்தை அவர் புகழ்ந்து பேசினார். குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்த அமைதிப்படை முகாமில் பணியில் இருந்த 43 இந்தியர்களும் துணிச்சலுடன் செயல்பட்டார்கள். இதனாலேயே பெரிய உயிர் இழப்பு தவிர்க்கப்பட்டது. இந்திய ராணுவத்தின் இந்த அர்ப்பணிப்பு மிகுந்த பாராட்டுக்குரியது.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் அவர் வெளியிட்ட ஒரு அறிக்கையில், 'தெற்கு சூடானில் எங்கள் பணி தொடரும். அதற்கு அச்சுறுதல்கள் வந்தால் அதை சந்திக்க தயாராக இருக்கிறோம்' என்று குறிப்பிட்டுள்ளார்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற தெற்கு சூடான் வெளியுறவு மந்திரி பர்னபா மரில் பெஞ்சமின் பேசுகையில், 'இந்த தாக்குதலை நடத்தியவர்களை பிடித்து நீதியின் முன் நிறுத்துவோம்' என்றார்.
இதற்கிடையில் அமெரிக்க போர் விமானங்கள் மீது புரட்சியாளர்கள் சுட்டதில் 4 வீரர்கள் காயம் அடைந்தனர். அங்கு வசிக்கும் அமெரிக்கர்களை மீட்க சென்ற போது இந்த சம்பவம் நடைபெற்றது.
இந்த விவகாரம் குறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சூசன் ரைஸ் மற்றும் அதிகாரிகளுடன் ஜனாதிபதி ஒபாமா அவசர ஆலோசனை நடத்தினார்.
தெற்கு சூடானில் இருக்கும் அமெரிக்கர்களுக்கு அந்நாட்டு தலைவர்கள் தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று வெள்ளை மாளிகை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
...
No comments:
Post a Comment