Sunday, February 9, 2014

முத்துராமலிங்கதேவர் சிலைக்கு தங்க கவசம்

பசும்பொன் நினைவிடத்தில் உள்ள முத்துராமலிங்கதேவர் சிலைக்கு தங்க கவசம் ஜெயலலிதா அணிவித்தார்

தேசிய தலைவர் என்று அழைக்கப்படும் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் நினைவிடம் ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் அமைந்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு சார்பில் அக்டோபர் மாதம் கடைசியில் முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை விழா நடைபெற்று வருவது வழக்கம். இதுதவிர அரசியல் கட்சிகள் சார்பிலும் தேவர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன்படி கடந்த 2010–ம் ஆண்டு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா பசும்பொன் நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தினார். அப்போது அங்கு திரண்டு இருந்த பொதுமக்கள் நினைவிடத்தில் உள்ள தேவர் சிலைக்கு தங்க கவசம் அணிவிக்க வேண்டும் என்று அவரிடம் கோரிக்கை விடுத்தனர்.

இதனை ஏற்றுக்கொண்ட முதல்–அமைச்சர் ஜெயலலிதா அ.தி.மு.க. சார்பில் தங்க கவசம் அணிவிக்கப்படும் என்று உறுதி அளித்து இருந்தார். பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் பசும் பொன்னில் உள்ள முத்துராமலிங்கதேவர் சிலைக்கு அ.தி.மு.க. சார்பில் தங்க கவசம் அணிவிக்கப்படும் என ஜெயலலிதா கடந்த சில தினங்களுக்கு முன்பு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்தார். அதனை நிறைவேற்றுவதற்காக அவர் இன்று பசும்பொன்வந்தார்.

இதற்காக முதல்–அமைச்சர் ஜெயலலிதா இன்று சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் பகல் 12.35 மணிக்கு மதுரை வந்தார். விமான நிலையத்தில் கலெக்டர் சுப்பிரமணியன், மேயர் ராஜன்செல்லப்பா, போலீஸ் கமிஷனர் சஞ்சய் மாத்தூர், மாநகராட்சி கமிஷனர் கிரண்குராலா, போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன், மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் கல்யாணி மதிவாணன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பகல் 1.30 மணிக்கு பசும்பொன் வந்தார். அங்கு அமைச்சர்கள், ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர், போலீஸ் ஐ.ஜி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள், அ.தி.மு.க. நிர்வாகிகள் அவருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனர்.

அதன்பிறகு பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்திற்கு வந்தார். அங்கு தயாராக வைக்கப்பட்டிருந்த தங்க கவசத்திற்கு புனித நீர் ஊற்றினார். அதன்பிறகு ரோஜா மலர்களை தூவினார். அதை தொடர்ந்து தங்க கவசங்களை கோவை காமாட்சிபுரி ஆதீனத்திடம் ஜெயலலிதா வழங்க, அதனை முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு அவர் அணிவித்தார். அதன்பின்னர் நடைபெற்ற பூஜையில் கலந்து கொண்டு முத்துராமலிங்கத்தேவருக்கு மரியாதை செலுத்தினார்.

பின்னர் ஹெலிகாப்டரில் மதுரை புறப்பட்ட அவர் அங்கிருந்து தனி விமானத்தில் சென்னை புறப்பட்டு செல்கிறார்.

முன்னதாக முதல்–அமைச்சர் ஜெயலலிதா வருகையையொட்டி பசும்பொன்னில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம், நத்தம் விசுவநாதன், கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், கே.டி.ராஜேந்திரபாலாஜி, சுந்தரராஜ் மற்றும் முக்கிய நிர்வாகிகள் விழா ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.

ஜெயலலிதாவை வரவேற்க மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட தென்மாவட்டம் முழுவதிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான வாகனங்களில் தொண்டர்கள் பசும் பொன் வந்து குவிந்தனர்.

"வீரம் என்ற குணம் தான் எதிரியும் தன்னை மெச்சும்படியான நிலையை ஏற்படுத்தும். கோழைத்தனம் அவ்வாறு செய்யாது."
 

No comments:

Post a Comment

Popular Posts